'வருங்காலத் தொழில்நுட்பம்’ புத்தகத்தின் முதல் தொகுதியை அனுப்புவதாக உறுதியளித்த அண்டன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி !
WWW - வருங்காலத் தொழில்நுட்பம்
அண்டன் பிரகாஷ்
சென்ற வாரத்தில், கடைகளில் பொருட்களைக் கொண்டுவந்து விற்கும் brick & mortar நிறுவனம் ஒன்று அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்குப் போட்டியாக அறிவித்திருக்கும் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம் எனச் சொல்லிஇருந்தேன். அந்தக் கட்டுரை எழுதப்பட்ட பின்னர், இன்னும் இரண்டு நிறுவனங்கள் இதே பாணியில் திட்டங்களை வெளியிட்டுள்ளன. டார்கெட், வால்மார்ட், பெஸ்ட் பை ஆகிய பிரபல நிறுவனங்கள்தான் இவை.
டார்கெட் என்ன செய்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைக்குள் நுழைகிறீர்கள். தேவைப்பட்ட பொருளை (உதாரணத்துக்கு டி-ஷர்ட் என வைத்துக்கொள்ளலாம்) வாங்கி வரலாம். ஒருவேளை உங்களுக்குப் பிடித்த நிறம் கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது குறிப்பிட்ட டி-ஷர்ட் ஸ்டாக்கிலேயே இல்லை என்றாலோ, கவலை ஒன்றும் இல்லை. அது வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் அந்தப் பொருளுக்கு உரிய QR குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கும். உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் அலைமென்பொருளைப் பயன்படுத்தி அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்துகொண்டால் போதும்; உங்களது வீட்டுக்கு அதை அனுப்பிவைத்துவிடுவார்கள். உங்களது பெயர், முகவரி, கடன் அட்டை விவரங்களை ஒரு முறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும். கடைக் குச் சென்று பொருட்களை வாங்கி சுமந்து வர சோம்பல்கொள்பவர்கள், கடைகளைக் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று அலைபேசிகளில் ஸ்கேன் செய்வதை
டார்கெட் கடைகளில் விரைவில் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
டார்கெட் கடைகளில் மேற்கண்ட விதத்தில் நீங்கள் வாங்கும்போது, உங்களது பொருட்கள் அவர்களது ஆன்லைன் வணிகப் பிரிவில் இருந்து அனுப்பிவைக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.
வால்மார்ட் ஒரு படி மேலே சென்று விட்டது. கிட்டத்தட்ட டார்கெட் போலவேதான் நுகர்வு அனுபவம் இருக்கப்போகிறதாம். ஆனால், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து டெலிவரி செய்யப்போவது, நீங்கள் ஆர்டர் செய்த அதே கடையாகவே இருக்கும் என்கிறது அவர்களது திட்டம். இதன் மூலம் வாடிக்கையாளர்களோடு மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது அவர்களது எண்ணம். இந்தியாவில் இருந்து மகள் பிரசவத்துக்காக கலிஃ«பார்னியா வருகை தரும் மடக்கிவிட்ட முழுக்கை சட்டை அணிந்த மாமா, சேலை அணிந்த மாமி தம்பதியினர் மாலை வேளையில் காலாற நடந்து வால்மார்ட் சென்று வெண்டைக்காய் ஆர்டர் செய்துவிட்டால், வாக்கிங் முடிந்து வீடு வருகையில் காய்கறி காத்திருக்கும்.
வெயிட்! கலிஃபோர்னியா என்ன... மத்திய அரசின் திட்டப்படி இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் இருக்கும் வால்மார்ட்களில் மேற்கண்டவை நடக்கச் சாத்தியக்கூறுகள் உண்டு.
வருடக் கடைசியில் வரும் விடுமுறைகளின்போது நடக்கும் மிகப் பெரிய வணிகத்தை மனதில்கொண்டுதான் இந்த நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆன்லைன் வணிகங்களுடன் போட்டியிட முயற்சி செய்கின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் பயனுள்ளதாக, லாபகரமானதாக இருந்ததா என்பது அடுத்த வருடத் தொடக்கத்தில் தெரிந்துவிடும்.
LOG OFF