உலகின் மிகப் பரந்த தபால் சேவை:
உலகிலேயே மிகப் பரந்த சேவையளிக்கும் தபால் துறை , இந்தியாவின் அஞ்சல் துறையாகும். இத்தகைய பெருமை மிகு அஞ்சல் துறையின் தற்போதைய நிலைமை என்ன ? ஒன்றரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அஞ்சலகங்கள் , நான்கரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் என இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் கடைக் கோடி கிராமங்களையும் இணைக்கும் அற்புதமான இணையம் இந்த அஞ்சல் துறை. வங்கிகளைப் போல, அஞ்சல் துறையில் வேலை கிடைப்பதும், வேலை பார்ப்பதும் கௌரவமாக நினைக்கப் பட்ட காலம் ஒன்று உண்டு.
![]() |
Photo Credits to : Fabien David @ Flickr https://www.flickr.com/photos/moneyticketspassport/6974944070 |
அஞ்சல் துறையின் "முகவரி சான்று" சேவை :
பல வகைப்பட்ட சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் , மக்களால் அதிகம் அறியப்படாத சேவை இந்த "முகவரி சான்று" சேவை. வேலை நிமித்தமாக பல ஊர்கள், மாநிலங்கள் மாறி வேலை பார்க்க வேண்டியிருப்பதால் பல காரணங்களுக்காக "முகவரி சான்றிதழ்" தேவைப்படுகிறது . ஆனால் அதற்காக பலவாறு சிரமப்படவேண்டியிருக்கிறது. இத்தகைய மக்களுக்காக அஞ்சல் துறை ஒரு அருமையான திட்டத்தை கொண்டுவந்தது .
அஞ்சலகத்தில் உள்ள "முகவரி சான்று" விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தபின், அஞ்சலக ஊழியர் ஒருவர் கொடுக்கப்பட்ட முகவரியை நேரடியாக சென்று சரி பார்த்து பின்னர் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை/ முகவரி அட்டையை தருவார்கள். இதைக் கொண்டு சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு என பல சேவைகளை பெற முடியும் .
புதிய சிந்தனை இல்லாமை / அலட்சிய போக்கு :
கால ஓட்டத்தோடு தனது சேவைகளை மேம்படுதிக்கொள்ளாமல், அஞ்சலக பிரிவான "தந்தி" சேவை தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டது ஒரு உதாரணம் தான். விரைவான சேவை , வாடிக்கையாளர் எப்போதும் அணுகக் கூடிய எளிமை ஆகிய காரணங்களால் தனியார் அஞ்சல் (எ) கூரியர் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்து , வெற்றியும்பெற்றன.இன்று பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் , தொழில் முறை கடிதங்கள் மட்டுமே அரசின் அஞ்சல் துறையை பயன்படுத்துகின்றன. மக்கள் தங்களை புறக்கணித்து தனியார் சேவையை ஏன் தேடுகின்றனர் என்பதை கொஞ்சமும் பொருட்படுதிக்கொல்லாத, அலட்சியப் போக்கே இப்போதைய அஞ்சலகங்களிலும் , அஞ்சல் அலுவலர்களிடமும் காண முடிகின்றது. இத்தகைய ஒரு நல்ல திட்டத்தை மக்களிடையே சரிவர விளம்பரப் படுத்தாமல் விட்டதால் , பெரும்பாலும் இதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை.
எனது அனுபவம் :
இணையத்தின் வழியாக இந்த சேவையை அறிந்து , இதனை பெறுவதற்காக அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகினேன். அலுவலகம் எந்த பரபரப்பும் இல்லாமல் காலியாக இருந்தது. ஊழியர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இந்த சேவைக் காண விண்ணப்பத்தை நான் கேட்டவுடன், ஏதோ புரியாத ஒன்றை கேட்டது போல ஒரு பார்வை பார்த்தார் அந்த ஊழியர். பின்பு அவர் கூறியது தான் அதிர்ச்சி..
"முகவரி சான்று" கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கு இன்னும் அந்த சான்று கிடைக்கவில்லை. குறைந்தது ஒரு வருடம் ஆகலாம், வராமலும் போகலாம். எனவே நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். வேறு ஏதாவது வழி இருந்தால் அதை முயற்சி செய்யுங்கள் என்று "கூசாமல்" கூறிவிட்டு,திரும்பிக் கொண்டார் .
அஞ்சலகத்தின் சேவை ஒன்றைப் பற்றி அதன் ஊழியரே இவ்வளவு மட்டமான கருத்து வைத்திருந்தால் , பொது மக்களுக்கு இந்த துறையின் மீதும், அதன் ஊழியர் மீதும் என்ன நம்பிக்கை இருக்கும் ? என்ன மதிப்பு இருக்கும் ? ஊழியர்களின் இத்தகைய மனப்பாங்கினால், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த துறை எவ்வாறு லாபத்தை கொடுக்கும்? என்ன தான் அரசு திட்டங்கள் தீட்டினாலும், சேவைகளை அறிமுகப் படுத்தினாலும், இத்தகைய ஊழியர்களால் அது சரியான மக்களைச் சென்று சேர்வதேயில்லை.
உலகமயமாக்கலின், தனியார்மயமாக்கலின் பெரும் சுழற்காற்றில் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா ?
அரசும் அதன் ஊழியர்களும் விழித்தால் நலம் !